இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு; தீர்த்தக் கிணறுகளிலும் நீராட தடை!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, இன்று ஆக.21ம் தேதி வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவின் கடைசி நாளான இன்று காலை 6 மணியளவில் சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாள் ஆகிய தெய்வங்கள் தங்கக் கேடயத்தில் ராமர்பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் சிறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனையொட்டி இன்று காலை 6 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலின் பிரதான நடை சாத்தப்பட்டது.

கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்தில், அதாவது இன்று இரவு வரை கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராட அனுமதி கிடையாது. அதேபோல இன்று இரவு வரை பக்தர்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திருக்கோயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளன.
