35 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட ஒரு வயது குழந்தை! ஆந்திராவில் 5 பேர் கைது

 
ராணிப்பேட்டை

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரி, 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். குழந்தையைக் கண்டுபிடிக்க போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இந்த மீட்பு நடந்துள்ளது.

குழந்தை உயிரிழப்பு

செப்டம்பர் 24-ல் மாயமான குழந்தை

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் - பிரேமா தம்பதியின் ஒரு வயது குழந்தை மகேஸ்வரி. கடந்த செப்டம்பர் 24-ம் தேதி இரவு, பெற்றோருடன் வீட்டின் வெளிப்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை காணாமல் போனது. இதுகுறித்து பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில், குழந்தையைத் தேடுவதற்காக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

ரேணிகுண்டாவில் மீட்பு; 5 பேர் கைது

தீவிர விசாரணையின் தொடர்ச்சியாக, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா ரயில் நிலையம் அருகே குழந்தை இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.

குழந்தை மீட்கப்பட்ட இடத்தில் இருந்த மல்லீஸ்வரி உள்ளிட்ட இருவரையும், குழந்தையை அவரிடம் கொடுத்ததாகக் கூறப்படும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தம்பதியினர் உள்ளிட்ட மேலும் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை கடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.