ராணிப்பேட்டையில் பழைய இரும்புக் குடோனில் பயங்கர தீ விபத்து! பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள நெலிக்குப்பம் மோட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பழைய இரும்புப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் இன்று (அக். 12) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய இரும்புப் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுப் பொருட்களில் தீ பரவி, குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.
தீயின் வெப்பம் அதிகமாக இருந்ததால், அங்கிருந்த இரும்புக் கட்டமைப்புகள் மற்றும் உலோகப் பொருட்களும் சேதமடைந்தன. குடோனில் இருந்து எழுந்த கரும்புகை பல கிலோமீட்டர் தொலைவுக்குத் தெரிந்ததால், அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இரும்புப் பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
