இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது... இடிபாடுகளில் சிக்கி 2 டிரைவர்களும் உயிரிழப்பு - பொக்லைன் இயந்திரம் மூலம் உடல்கள் மீட்பு!

 
விபத்து விபத்து


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு - செய்யாறு சாலையில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கரிக்கந்தாங்கலைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பவர் இன்று காலை செய்யாறிலிருந்து ஆற்காடு நோக்கி லாரி ஓட்டிச் சென்றார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த நரேஷ் (25) என்பவர் ஆற்காட்டிலிருந்து செய்யாறு நோக்கி லாரியை ஓட்டி வந்தார்.

ஆற்காடு அடுத்த கலவை கூட்ரோடு, முள்ளுவாடி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக இரு லாரிகளும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஓட்டுநர்கள் அருண்குமார் மற்றும் நரேஷ் ஆகிய இருவருமே லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

லாரி

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை டி.எஸ்.பி கனகராஜ் மற்றும் கலவை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். லாரிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாரிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, ஓட்டுநர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்த விபத்து காரணமாக ஆற்காடு - செய்யாறு சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.