பெண்களே உஷார்... பைக் டாக்ஸி ஓட்டுநரின் அத்துமீறிய பேச்சு… ஆடியோவை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வைத்த பெண்!
பெண் பயணியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசியதாகக் கூறப்படும் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தொலைபேசி உரையாடலில் அத்துமீறல்
பெண் ஒருவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், பைக் டாக்ஸி ஓட்டுநருடன் பேசிய தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார். ஓட்டுநர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டதாகத் தெரிவித்த நிலையில், வந்த தகவலை ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு ஓட்டுநர் கன்னட மொழியில் ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் வாகன விவரங்களையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஓட்டுநரை நீக்கிய ரேபிடோ
இந்தச் சம்பவம் குறித்து ரேபிடோ நிறுவனம் விளக்கம் வெளியிட்டுள்ளது. பெண் பயணிக்கு ஏற்பட்ட அனுபவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ள நிறுவனம், விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தங்களது தளத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், தவறான நடத்தையை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் பைக் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
