சாதி ரீதியான விமர்சனம்... கார் ஓட்டுநர் உரிமத்தை 99 வருடம் ரத்து செய்த ரேபிடோ!

 
ரேபிடோ

 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ரேபிடோ நிறுவனத்தில் கார் ஓட்டுநராக அங்கித் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 30 என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவர் சவாரியில் இருக்கும்போது புக்கிங் மூலமாக நான்கு ரெயில்வே துறை அதிகாரிகளை ஏற்றிச் சென்றுள்ளார். அந்த அதிகாரிகள் உத்ரேட்டியா ரெயில் நிலையத்திலிருந்து சார்பாக் ரெயில் நிலையம் வரை செல்வதற்காக இந்த வாகனத்தைச் சவாரிக்கு அமர்த்தியுள்ளனர்.

காரில் பயணித்த அதிகாரிகள் அவர்களது மூத்த அதிகாரியைச் சாதியைக் குறிப்பிட்டுத் தொடர்ந்து விமர்சித்து வாய்க்கு வந்தபடி பேசியுள்ளனர். இதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஓட்டுநர் அங்கித் அதே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அதனைத் தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத அதிகாரிகள் மீண்டும் மீண்டும் சாதி தொடர்பாகவே பேசியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் காரை வழியில் நிறுத்தி நால்வரையும் இறங்குமாறு கூறியுள்ளார்.

இதன் பிறகு அந்த அதிகாரிகள் ரேபிடோ நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டு ஓட்டுநர் நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றதாகப் பொய் புகார் அளித்துள்ளனர். இது குறித்து முறையான விசாரணை எதையும் நடத்தாத ரேபிடோ நிறுவனம் ஓட்டுநரின் உரிமத்தை 99 ஆண்டுகள் 11 மாதங்களுக்குச் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநரிடம் விளக்கம் கேட்காமல் எடுக்கப்பட்ட இந்தத் கடுமையான நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.