ராஷ்மிகாவுக்கு ஒரே நாளில் இரண்டு முறை மாங்கல்ய தாரணம்... 2வது முறையாக குடகு கலாச்சாரப்படி 'கொடவா' திருமணம்!
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணக் கொண்டாட்டங்கள் இன்று கொடவா முறைப்படி இரண்டாவது முறையாக நடைபெற்றது. இன்று காலை ஆந்திரா முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், மாலையில் ராஷ்மிகாவின் பூர்வீக கலாச்சாரமான குடகு முறைப்படியான கொடவா சடங்குகளுடன் இரண்டாவது முறையாக திருமணம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் குடகின் கொடவா சமூகத்தைச் சேர்ந்த ராஷ்மிகாவின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் இந்த இரண்டாம் கட்ட திருமணச் சடங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. சாதாரணத் திருமணங்களில் இருந்து கொடவா திருமணங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
கொடவா திருமணங்களில் வேத மந்திரங்களோ அல்லது புரோகிதர்களோ இருப்பதில்லை. மாறாக, குடும்பப் பெரியவர்களின் முன்னிலையிலும் அவர்களின் ஆசிர்வாதத்துடனும் மட்டுமே சடங்குகள் நடைபெறும். இந்தத் திருமணங்கள் குல மரபுகள் மற்றும் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதை அடிப்படையாகக் கொண்டவை.
மணமகன் பாரம்பரிய 'குப்பியா' உடையையும், மணமகள் குடகு முறைப்படியான தனித்துவமான சேலை அலங்காரத்தையும் (பின்பக்கம் மடிப்பு வைத்து கட்டுவது) அணிந்திருப்பார்கள். ஆடம்பரத்தை விட குடும்ப ஒற்றுமை மற்றும் சமூக உறவுகளுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இன்று காலை 8 மணியளவில் ஆந்திரா பாணியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து, தற்போது ராஷ்மிகாவின் கொடவா பாரம்பரிய சடங்குகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த ஒரு சில முக்கியப் பிரபலங்கள் மட்டும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். தங்களது இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களையும் மதிக்கும் வகையில் இந்த ஜோடி திருமணத்தை அமைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
