ஜனாதிபதி மாளிகை 'அமிர்த் உத்யான்' தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது!
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 15 ஏக்கர் பரப்பளவிலான 'அமிர்த் உத்யான்' (முன்னாள் முகலாய தோட்டம்), 'கோடைகாலப் மலர்கள் 2026' சிறப்புப் பதிப்பிற்காக இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
1917-ஆம் ஆண்டு சர் எட்வின் லுட்யன்ஸ் என்பவரால் இங்கிலாந்து மற்றும் முகலாயக் கட்டிடக் கலை பாணிகளை இணைத்து இந்த தோட்டம் வடிவமைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிகளான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம் மற்றும் ஆரோக்கிய வனம் உள்ளிட்ட கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டு மேலும் அழகுபடுத்தப்பட்டன.

இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் இத்தோட்டத்தைப் பார்வையிடலாம். திங்கட்கிழமைகளில் மட்டும் பராமரிப்புப் பணிகளுக்காக அனுமதி கிடையாது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இறுதி நுழைவு நேரம் மாலை 5:00 மணி வரை ஆகும்.
தோட்டத்தைப் பார்க்க நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. எனினும், நேரில் வந்து டிக்கெட் பெற முடியாது என்பதால், பார்வையாளர்கள் முன்னதாகவே visit.rashtrapatibhavan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
