ரேஷன் கடைகள் தமிழகம் முழுவதும் நாளை விடுமுறை... மார்ச் மாதப் பொருட்களை வாங்க இன்றே கடைசி வாய்ப்பு!

 
ரேஷன் கடை ரேஷன் கடை

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 26,618 முழுநேர மற்றும் 10,710 பகுதிநேர ரேஷன் கடைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (31-03-2026, செவ்வாய்க்கிழமை) சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான பகவான் மஹாவீர் பிறந்த தினமான மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளதால், ரேஷன் கடைகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. மார்ச் மாதத்திற்கான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை இன்னும் வாங்காத அட்டைதாரர்கள், அவற்றை இன்று (மார்ச் 30) மாலைக்குள் வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரேஷன் சர்க்கரை

நாளை விடுமுறை என்பதும், நாளை மறுநாள் (ஏப்ரல் 1) புதிய நிதியாண்டு பிறப்பதால் வழக்கமான கணக்கு முடிக்கும் பணிகள் இருக்கக்கூடும் என்பதாலும், மார்ச் மாத ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு இன்று ஒரு நாளே எஞ்சியுள்ளது.

தமிழக அரசின் 'தாயுமானவர் திட்டத்தின்' கீழ், கடைக்கு வர இயலாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கும் நாளைய விடுமுறை பொருந்தும் என்பதால், விநியோகஸ்தர்கள் இன்றைய தினமே பணிகளை முடிக்க முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

ரேஷன் ஊழியர்

எனவே, ரேஷன் அட்டைதாரர்கள் இந்த விடுமுறை அறிவிப்பைத் தெரிந்துகொண்டு, தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.