ரேஷன் லாரி மோதி விபத்து... உயர் நீதிமன்றத் துணைப் பதிவாளர் உட்பட 2 பேர் பலி!
வியாசர்பாடி ரயில்வே குட்ஸ் ஷெட்டில் இருந்து சென்னை தங்கசாலையில் உள்ள குடோனுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. கோயம்பேடு பாரதி நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற 46 வயது ஓட்டுநர் அந்த லாரியை ஓட்டி வந்துள்ளார். சென்னை பேசின் பிரிட்ஜ் மேம்பாலத்தில் லாரி வந்தபோது, எதிர்பாராத விதமாகத் திடீரென பிரேக் பிடிக்காமல் போனதாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, மூலக்கொத்தளம் சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், சிக்னலுக்காகக் காத்திருந்த சென்னை உயர் நீதிமன்றத் துணைப் பதிவாளர் முரளிதரன் மற்றும் கவுதம் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ராஜேஸ்வரி, பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஆத்திரமடைந்த பொதுமக்களிடம் இருந்து லாரி ஓட்டுநரை மீட்டு உடனடியாகக் கைது செய்தனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து காரணமாக வால்டாக்ஸ் சாலை, புளியந்தோப்பு, மூலக்கொத்தளம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
