குடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா? சென்னையில் 13ம் தேதி நுகர்வோர் குறைதீர் முகாம்!
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள இந்தத் துறையின் 19 மண்டல அலுவலகங்களிலும் வரும் 13-ம் தேதி சனிக்கிழமை அன்று மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்தச் சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தல், கைப்பேசி எண் மாற்றம் செய்தல் போன்ற திருத்தங்களையும் இந்த முகாம் மூலமாக எளிதாகச் செய்து கொள்ள வழகை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களையும் பொதுமக்கள் இந்த முகாமில் நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்யலாம். குறிப்பாக, வயது முதிர்வு காரணமாக நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு இந்த முகாமில் அங்கீகார சான்றும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
