பிறந்த சில நிமிடங்களிலேயே கால் மேல் கால் போட்டு கெத்துக் காட்டிய குழந்தை - இணையத்தில் வைரலாகும் 'ராயல் போஸ்'!

 
குழந்தை

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று, பிறந்த சில நிமிடங்களிலேயே கால் மேல் கால் போட்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு சாவகாசமாக ஓய்வெடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் உலகளவில் பெரும் வைரலாகி வருகிறது.

கெய்ரோவைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவ நிபுணரான டாக்டர் இஸ்லாம் எல்தே, தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது இந்தச் சுவாரசியமான காட்சியைப் பதிவு செய்துள்ளார்.

மருத்துவர் தனது ஸ்டெதாஸ்கோப் மூலம் குழந்தையின் இதயத் துடிப்பைப் பரிசோதிக்கும்போது, அந்தக் குழந்தை எந்தவித பதற்றமும் இன்றி, கடற்கரையில் ஓய்வெடுப்பது போல மிகமிகச் சாவகாசமாகப் படுத்திருந்தது. இதைக் கண்ட மருத்துவர் அதற்கு “ராயல் போஸ்” என்று பெயரிட்டுச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

குழந்தை

இந்தக் காட்சியைக் கண்டு ரசிக்கும் நெட்டிசன்கள், “வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொண்ட குழந்தை”, “ஓய்வு பெற்ற மில்லியனர் போல போஸ் கொடுக்கிறது”, “பிறந்த முதல் நாளே ‘மாஸ்’ காட்டும் பேபி” எனப் பலவாறாகக் கலகலப்பாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இது போன்ற அசைவுகள் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பச்சிளம் குழந்தைகள் தாயின் கருப்பையில் இருந்த நிலையின் தாக்கம் அல்லது ஆரம்பகால தன்னிச்சை அசைவுகளின் காரணமாகவே இது போன்ற உடல் அசைவுகளை வெளிப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்தக் குழந்தையின் கலகலப்பான போஸ் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.