மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு - பணக் கொள்கைக் குழு கூட்டத்தால் எதிர்பார்ப்பு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா நேரில் சந்தித்துப் பேசியுள்ளது நிதி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று நேரில் சந்தித்து முக்கிய பொருளாதார நிலவரங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக மாற்றமின்றித் தொடர்ந்தது. இதற்கிடையே, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக அடுத்த மாதம் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த வேண்டும் என ஸ்டேட் வங்கி ஆராய்ச்சி அறிக்கை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
