பழைய ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்றும் வாய்ப்பு - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

 
Indian Currency 2000 rupee

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தது. பொதுமக்கள் மற்றும் வணிக அமைப்புகள் தங்கள் வசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வைப்பு செய்யவும் அல்லது மாற்றிக் கொள்ளவும் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 98.47 சதவீதம் வரை ரிசர்வ் வங்கியிடம் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. இருப்பினும், 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி இன்னும் சுமார் 5,451 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்து சேராமல் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000

வழக்கமான வர்த்தக வங்கிக் கிளைகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடைமுறை முடிவுக்கு வந்தபோதிலும், ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது: பொதுமக்கள் தங்கள் வசமுள்ள பழைய 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 மண்டல வெளியீட்டு அலுவலகங்களில் நேரில் சென்று நேரடியாகச் சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், இந்திய அஞ்சல் துறை மூலமாக தங்களின் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பாதுகாப்பாக அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம். அஞ்சல் மூலம் பெறப்படும் நோட்டுகள் சரிபார்க்கப்பட்டு, அதற்கான உரிய தொகை அவர்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

ரூ2000

சென்னையைப் பொறுத்தவரை, பாரிமுனை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 2,000 ரூபாய் நோட்டுகளைச் சமர்ப்பித்துத் தங்களின் வங்கி கணக்குகளில் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.