விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம் குறித்த முழு விவரம்!
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள பாரம்பரிய காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ள நோட்டுப் புழக்கத்தைத் தடுக்கவும், கையாளுவதற்கு எளிதான ரூபாய் நோட்டுகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
ரிசர்வ் வங்கி இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை உடனடியாக ஒட்டுமொத்தமாகப் புழக்கத்தில் விடாமல், படிப்படியாக அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தொடக்கத்தில் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் மற்றும் எளிதில் அழுக்கடைய வாய்ப்புள்ள 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் இந்த பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தைச் சோதனை அடிப்படையில் பயன்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
முதற்கட்ட சோதனையின் முடிவுகள் மற்றும் மக்களின் வரவேற்பை ஆராய்ந்த பிறகு, வரும் 2027-ஆம் ஆண்டில் இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் சந்தையில் முழுமையான புழக்கத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுவதால், தற்போது மக்கள் கைகளில் புழங்கும் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாததாகிவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் நோட்டுகள் வந்த பிறகும், தற்போதைய காகித நோட்டுகள் சட்டப்பூர்வமாகச் செல்லும். சந்தையில் பிளாஸ்டிக் மற்றும் காகிதம் ஆகிய இரண்டு வகையான ரூபாய் நோட்டுகளுமே சம காலத்தில் புழக்கத்தில் இருக்கும் வண்ணம் இந்த மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் நன்மைகள் என்னென்ன?
உலகளவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே இந்த பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு மாறிவிட்டன. இதற்குக் காரணங்களாக முன்வைக்கப்படும் நன்மைகள்: காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் எளிதில் கிழியாது மற்றும் தண்ணீரில் நனைந்தாலும் வீணாகாது. மேலும், இவை எளிதில் அழுக்கடையாது என்பதால் நீண்ட காலத்திற்குப் புதியது போலவே இருக்கும்.
இந்த பிளாஸ்டிக் நோட்டுகளில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களையும், வாட்டர் மார்க்குகளையும் இணைப்பது எளிது. இதனால் கள்ள நோட்டுகளை அச்சிடுவது முற்றிலும் சாத்தியமற்றதாக மாறும். இந்த அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுத் திட்டம் குறித்த ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
