“அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சமாளிக்கத் தயார்” - ஈரான் அறிவிப்பு!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சுமார் 9 மாதங்களாக நீடித்து வரும் போர் மற்றும் ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக, அந்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைப் பற்றித் தங்களுக்கு எவ்விதக் கவலையும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஈரானின் முதல் துணை அதிபர் முகமது ரெசா ஆரிப் மாற்று எல்லை வழியாகச் சரக்குப் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியதுடன், தரை எல்லைகள் மற்றும் காஸ்பியன் கடல் வழியாக ஆயுதங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ‘டாஸ்க் ஃபோர்ஸ் அயர்ன் கேட்’ நடவடிக்கையையும் அறிவித்தது. இதற்குப் பதிலளித்த முதல் துணை அதிபர் முகமது ரெசா ஆரிப், “தெற்கு அல்லாத பிற எல்லைகள் வழியாகச் சரக்குகளை இறக்குமதி செய்து சுங்க அனுமதி பெறுவது அதிகரித்துள்ளது; எதிரியின் கடற்படை முற்றுகையைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு வலுவாக உள்ளது எனக் கூறிய அவர், குறைந்தபட்சம் அடுத்த 3 மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் புள்ளிவிவர மையத்தின் தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் விலைகள் கடந்த ஆண்டை விட 88.7 சதவீதம் அதிகரித்துள்ளன. ஆண்டு சராசரிப் பணவீக்கம் 76.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவு மற்றும் பானங்களின் விலை ஆண்டு அடிப்படையில் 112.6 சதவீதம் உயர்ந்துள்ளதால், சாமானிய மக்களின் வாங்கும் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கிடையில், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பட்ஜெட் நிதி மற்றும் எரிசக்திச் சேமிப்பை அதிகளவில் திருப்பி விடத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
