ரெட் அலர்ட்... கொடைக்கானல், நீலகிரியில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல் - மலைப்பயணங்களைத் தவிர்க்க கடும் எச்சரிக்கை!

 
ரெட் அலர்ட் கொடைக்கானல் நீலகிரி கனமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு அக்டோபர் 25-ஆம் தேதியன்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொடைக்கானலில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்மழை, நிலச்சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் கொடைக்கானல் நீலகிரி கனமழை

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீர் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மலைப் பிரதேசங்களுக்கான பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் ஆபத்தான மலைப் பாதைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, கொடைக்கானல் மலைச் சாலையில் அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் நிலச்சரிவு அல்லது மரங்கள் முறிந்து விழுந்தால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதாலேயே இந்த இரவு நேரப் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் கொடைக்கானல் நீலகிரி கனமழை

தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மலைச் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால் பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் செல்லக்கூடிய போக்குவரத்து பாதைகள் துண்டிக்கப்பட்டு, சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியுலகத் தொடர்பின்றித் தவித்து வருகின்றனர். சாலைகளை உடனடியாகச் சீரமைத்து நிலச்சரிவுகளை அகற்றும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினரும் நெடுஞ்சாலைத் துறையினரும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.