கேரளாவில் ரெட் அலர்ட்.. இன்று 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாகக் கனமழை பொழிந்து வருகிறது. மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 9 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, கோட்டயம், திருச்சூர், மலப்புறம் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஆலப்புழையின் செங்கன்னூர், குட்டநாடு ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. சில இடங்களில் 204.4 மி.மீக்கும் அதிகமான மழை கொட்டித் தீர்க்கக் கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பம்பை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ரான்னி, ஆரன்முளா மற்றும் செங்கன்னூர் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்பான அசம்பாவிதங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் காயமடைந்துள்ள நிலையில் 8 பேரைக் காணவில்லை எனக் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். மழை அபாயம் இன்னும் தணியாததால், பொதுமக்கள் மற்றும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மாநில அரசு தீவிர வேண்டுகோள் விடுத்துள்ளது.
