செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கு - உமர் உன் நபி முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!
கடந்த 2025 நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த அதிபயங்கர கார் குண்டுவெடிப்பு வழக்கில், தேசிய புலனாய்வு முகமை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை குண்டுவெடிப்பின் போது காரிலேயே வெடித்துச் சிதறி உயிரிழந்த உமர் உன் நபி (எ) பிண்டா என்பவர், 'அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்' பயங்கரவாதக் குழுவின் முக்கிய செயல்பாட்டுப் பொறுப்பாளராகச் செயல்பட்டுள்ளார். ராகுல் பட் என்பவருடன் இணைந்து, செயலற்றுக் கிடந்த ஏ.ஜி.யு.எச் அமைப்பை மீண்டும் உயிர்ப்பித்து, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றச் சதித்திட்டம் தீட்டியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தடயங்களை ஆய்வு செய்ததில், டி.ஏ.டி.பி மற்றும் அம்மோனியம் நைட்ரேட் போன்ற ஆபத்தான வெடிமருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தடயவியல் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2025 நவம்பர் 10ம் தேதியன்று மாலை நடைபெற்ற இந்த வெடிவிபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 29 பேர் படுகாயமடைந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த வாகனங்கள் மற்றும் சொத்துக்களும் கடுமையாகச் சேதமடைந்தன. குண்டுவெடிப்பில் உமர் உன் நபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் அவருக்கு எதிரான நேரடி நடவடிக்கைகள் கைவிடப்பட்டாலும், இந்த ஒட்டுமொத்த பயங்கரவாதச் சதித்திட்டத்தின் பின்னணி மற்றும் அவரது பங்கு குறித்து என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் விரிவாகப் பதிவு செய்துள்ளது.
