கொடைக்கானல் டூர் போன இடத்தில் வனப்பகுதிக்குள் ரீல்ஸ்... தடையை மீறி நிதியமைச்சர் மரிய வில்சன் ஜீப் டிரெக்கிங்!

 
மரிய வில்சன்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட பேரிஜம் ஏரிப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் தவெக நிர்வாகிகள் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஜீப் டிரெக்கிங் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் பேரிஜம் ஏரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் சாலையைக் கடந்த மூன்று புலிகளை வீடியோ எடுத்தனர். இதன் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்தது. கடந்த 4 மாதங்களாக இந்தத் தடை தொடர்ந்து அமலில் உள்ளது.

கடந்த சில நாட்களாகக் கொடைக்கானலுக்கு டூர் விசிட் வந்துள்ள நிதியமைச்சர் மரிய வில்சன், தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வது மற்றும் ஏரியில் படகு சவாரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும், பேரிஜம் ஏரிப்பகுதியில் உள்ள வாட்ச் டவரை ஆய்வு செய்வது போல அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் வலம் வந்துள்ளார்.

தடையை மீறி கடந்த 12-ம்தேதி நிதியமைச்சருடன் சுமார் 25-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகளை வனத்துறை அதிகாரிகள் ஜீப் டிரெக்கிங் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சாலையோரத்தில் இருந்த மூலிகைச் செடியை அமைச்சருக்குக் காட்டிய வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் மற்றும் அவரது கட்சியினரை மட்டும் வனத்துறை அதிகாரிகள் எப்படி உள்ளே அழைத்துச் செல்லலாம் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்திச் சட்டத்தை மீறிய வனத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.