அரசு பள்ளி வகுப்பறையில் தவெக ரீல்ஸ்... அண்ணாமலை கண்டனம்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த சம்பவத்திற்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அரசுப் பள்ளி வளாகங்களை அரசியல் விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என விமர்சித்துள்ளார்.
உத்திரமேரூர் அரசுப் பள்ளியின் வகுப்பறைச் சுவற்றில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் புகைப்படத்தை மாட்டி, 20-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது போல ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, மாணவர்களின் கல்வி கற்கும் புனிதமான இடமான அரசுப் பள்ளி வகுப்பறைகளைத் தங்களது சுயநல அரசியல் விளம்பரத்திற்காகத் தவெகவினர் பயன்படுத்தியிருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பொறுப்பற்ற செயல்பாடுகள், ஏற்கனவே பல சவால்களைச் சந்தித்து வரும் அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசியல் கட்சியினர், அரசு விதிகளையும் பள்ளி ஒழுக்கத்தையும் காற்றில் பறக்கவிட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது ஏற்புடையதல்ல என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஒழுங்கீனமான மற்றும் அத்துமீறிய செயல்கள் கல்வி நிறுவனங்களுக்குள் மீண்டும் நடைபெறாதவாறு, தவெகவினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கல்வித் துறை உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
