உல்லாசத்திற்கு மறுப்பு.. கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொடூரக் கொலை!
பெங்களூரு புறநகர் ஜிகினி பகுதியில், உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலியை வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டித் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீசார், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா ஜிகினி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரும், அஷிதா என்ற பெண்ணும் கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

அஷிதா ஜிகினியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்த நானே சாகேப் (28) என்ற வாலிபருடன் அஷிதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கள்ளக்காதல் தீவிரமானதைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஷிதா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், ஜிகினி பாதாளம்மா லே-அவுட் பகுதியில் நானே சாகேப்புடன் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி, நானே சாகேப் அஷிதாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அஷிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற நானே சாகேப், அஷிதாவை கீழே தள்ளி அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் அஷிதா இறந்ததை உறுதி செய்து கொண்டு, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கொலை நடந்து சில தினங்கள் ஆன நிலையில், பூட்டிக்கிடந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜிகினி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அஷிதாவின் உடல் முற்றிலும் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜிகினி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கள்ளக்காதலன் நானே சாகேப்பை கைது செய்யப் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
