எஸ்.ஐ.யால் சுடப்பட்டவருக்கு சிகிச்சை மறுப்பா? உறவினர்கள் 3-வது நாளாகப் போராட்டம் - ஆலங்குளத்தில் வலுக்கும் எதிர்ப்பு.. கடையடைப்பு போராட்டம்!
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் எஸ்.ஐ. இசக்கிராஜாவால் சுடப்பட்ட விவசாயி மணிகண்டனுக்கு, மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கள் இறக்கியதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணைக்குச் சென்ற ஆலங்குளம் எஸ்.ஐ. இசக்கிராஜா, வாக்குவாதத்தின் போது விவசாயி மணிகண்டனின் இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டார். இந்தச் சம்பவத்தில் மணிகண்டனின் தந்தை மற்றும் மகள் மயிரிழையில் உயிர் தப்பினர். இது தொடர்பாக எஸ்.ஐ. இசக்கிராஜா உள்ளிட்ட 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மணிகண்டன் குறித்து அவரது உறவினர்கள் முன்வைக்கும் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன: துப்பாக்கிச் சூடு நடந்து 48 மணி நேரத்தைக் கடந்தும், இதுவரை முதலுதவி மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மணிகண்டனின் காலில் இருந்து இன்னும் இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும், உரிய சிகிச்சை அளிக்கத் தாமதிப்பதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர்.
உரிய சிகிச்சை கோரியும், எஸ்.ஐ.-யைக் கைது செய்யக் கோரியும் மருதம்புத்தூரில் உள்ள கோவிலில் உறவினர்கள் 3-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிகிச்சை உடனடியாக வழங்கப்படாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நீதி கோரியும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி (சனிக்கிழமை) ஆலங்குளம் பகுதியில் கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
