செம... இனி ஆன்லைனில் பத்திரப்பதிவு ... தமிழக அரசு புதிய உத்தரவு!

 
பத்திரப்பதிவு பத்திரப்பதிவு

 

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காகப் பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மக்கள் நேரில் செல்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் இணையவழியாகப் பத்திரங்களை எளிதாகப் பதிவு செய்யும் புதிய திட்டத்தைப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வருகை இல்லா ஆவணப்பதிவு முறை விரைவில் முழுமையாகக் கட்டாயமாக்கப்பட உள்ளதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழகப் பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

பத்திரப்பதிவு

முதற்கட்டமாக மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனைப் பத்திரங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியவற்றை இந்த புதிய முறையின் மூலம் மக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களின் சொந்த கணக்கு மூலம் உள்நுழைந்து இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார் பதிவாளர் பத்திரப்பதிவு ரிஜிஸ்டர் அலுவலகம்

இந்த இணையவழிப் பதிவிற்கு ஆவணங்களை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவரும் தங்களின் ஆதார் அட்டையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். கைரேகை அல்லது கருவிழிப் படலம் மூலம் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுப் பதிவு முடிந்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் கூடிய பத்திரம் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கும் மொபைல் எண்ணிற்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புவோர் இணைய இணைப்பு, விரல் ரேகை இயந்திரம் மற்றும் புகைப்படக் கருவி போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.