ரிலாக்ஸ் வீடியோ.. வாட்டர் பைக் ஓட்டிய மேயர் பிரியா!
சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட அன்னை சிவகாமி நகரில், வடசென்னை மக்களின் நீண்டநாள் கனவான புதிய படகு குழாம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் ஆர். பிரியா கலந்துகொண்டு படகு சவாரியைத் தொடங்கி வைத்தார். எண்ணூர் பகுதியில் பயன்பாடற்று இருந்த குட்டையை, சுமார் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து, அதனை அழகான ஏரியாக மாற்றி சென்னை மாநகராட்சி இந்தப் படகு குழாமை அமைத்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் புதிய படகு குழாமை திறந்துவைத்த சென்னை மேயர் பிரியா, வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்தார்.#Chennai | #MayorPriya | #Boating pic.twitter.com/TSwK0j2xZI
— PttvOnlinenews (@PttvNewsX) March 2, 2026
படகு குழாமைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த பிறகு, மேயர் பிரியா அங்குள்ள வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது: அங்கிருந்த 'வாட்டர் ஸ்கூட்டர்' எனப்படும் அதிவேக நீர் வாகனத்தில் மேயர் பிரியா தானே அமர்ந்து ஏரியில் சவாரி செய்து மகிழ்ந்தார். பாதுகாப்பு உபகரணங்களுடன் மேயர் துணிச்சலாக வாட்டர் பைக் ஓட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

இந்தப் படகு குழாமில் மிதி படகுகள், துடுப்புப் படகுகள் மற்றும் இயந்திரப் படகுகள் எனப் பல்வேறு வகையான படகுகள் பொதுமக்களுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏரியைச் சுற்றி நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்காக நடைபாதை, சிறுவர் பூங்கா மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் தேங்கியிருந்த பகுதி தற்போது பசுமையான சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம், அந்தப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மக்களுக்குப் புதிய பொழுதுபோக்கு இடமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
