"அந்த 8 பெண்களை விடுதலை செய்யுங்கள்!"... ஈரானுக்கு ட்ரம்ப் கோரிக்கை - முறுக்கிக் கொள்ளும் சர்வதேச அரசியல்

 
ட்ரம்ப் ட்ரம்ப்

ஈரானில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் 8 பெண்களை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாகத் தனது 'ட்ரூத் சோசியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானியத் தலைவர்கள் இந்த விஷயத்தில் கருணை காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப்

பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இரண்டாம் சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்கவுள்ள நிலையில், டிரம்பின் இந்தத் தூது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. "இந்த 8 பெண்களின் விடுதலை என்பது, அமெரிக்கா - ஈரான் இடையிலான விரிசலைச் சரிசெய்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுக்கு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாக அமையும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதல்கள் நீடித்து வரும் சூழலில், டிரம்ப் நேரடியாகப் பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்திருப்பது ஈரானியத் தலைவர்களுக்கு விடப்பட்ட 'ராஜதந்திர சிக்னலாகவே' கருதப்படுகிறது. டிரம்பின் இந்த மனிதாபிமானக் கோரிக்கைக்கு ஈரான் செவிசாய்க்குமா அல்லது தனது பிடிவாதத்தைத் தொடருமா என்பது இன்றைய அமைதி பேச்சுவார்த்தையில் தெரிந்து விடும்.

ட்ரம்ப்

ஈரானில் நிலவும் கடும் சட்ட திட்டங்கள் மற்றும் பெண்களுக்கு விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள் குறித்துத் தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரின் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.