உக்ரைன் போர்ப்பகுதியில் சிக்கிய 13 இந்திய மாலுமிகள் - பாதுகாப்பாக மீட்க வெளியுறவுத் துறைக்குக் கோரிக்கை!

 
உக்ரைன் கப்பல் ஈரான்

ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உக்ரைனில் உள்ள செர்னோமோர்ஸ் துறைமுகத்தில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என இந்திய மாலுமிகள் சங்கம் மத்திய அரசிற்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனின் செர்னோமோர்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ‘எம்.வி. அமிர்-1’ என்ற சரக்குக் கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட மொத்தம் 15 மாலுமிகள் கரைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கருங்கடல் பகுதியில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கப்பலில் உள்ள மாலுமிகளின் உயிருக்குத் தொடர் ஆபத்து நிலவி வருகிறது.

இது குறித்து இந்திய மாலுமிகள் சங்கம் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே உக்ரைனின் ஒடேசா நகரில் நடைபெற்ற தாக்குதலில் இந்தியர்கள் சிலர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடைபெற்றுள்ளதை அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, நிலைமை மேலும் மோசமடைவதற்குள் ‘எம்.வி. அமிர்-1’ கப்பலில் உயிருக்குப் போராடி வரும் 13 இந்திய மாலுமிகளையும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டுப் பாதுகாப்பாக தாயகம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.