"ராஜினாமா பண்ணுங்க.. நான் பார்த்துக்கறேன்..” - வைகோவிடம் விஜய் கொடுத்த உறுதிமொழி!

 
வைகோ

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் வேகமாக மாறி வருகின்றன. இந்நிலையில், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ புதிய தகவல் ஒன்றை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தவெக தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து பேசுகையில், "திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தரப்பில் எங்களிடம் பேசினர். ஆனால், தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று நான் அவர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன்."

வைகோ

வைகோவின் இந்தத் தயக்கத்தைத் தொடர்ந்து, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் நேரடியாக வைகோவிடம் பேசி ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வைகோ தெரிவித்தார்.

பதவிகளை ராஜினாமா செய்ய மதிமுக எம்.எல்.ஏ-க்கள் தயங்குவதை அறிந்த முதலமைச்சர் விஜய், "நீங்கள் தாராளமாக அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று வைகோவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜினாமாவால் காலியாகும் அந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும்போது, தவெக கூட்டணியின் சார்பில் அந்த இரண்டு மதிமுக உறுப்பினர்களையும் மீண்டும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்னுடைய முழுப் பொறுப்பு என்று விஜய் தன்னிடம் நேரில் உறுதியளித்ததாக வைகோ சுட்டிக் காட்டியுள்ளார்.