நேபாள உள்துறை அமைச்சர் பதவி ராஜினாமா... பெரும் பரபரப்பு!
நேபாள நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அந்த நாட்டின் உள்துறை மந்திரி சுதன் குருங் இன்று ஏப்ரல் 22 தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது சுமத்தப்பட்ட நிதி முறைகேடு புகார்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர்களுடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார். பதவியேற்ற ஒரு மாத காலத்திற்குள்ளேயே ஊழல் புகாரில் சிக்கி ஒரு மந்திரி பதவி விலகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது ராஜினாமா குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சுதன் குருங், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியை விட்டு விலகுவதாகத் தெரிவித்துள்ளார். பதவி என்பதை விட ஒழுக்கமும் பொதுமக்களின் நம்பிக்கையுமே மேலானது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முறைகேடு புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் தீபக் பட்டா என்பவருடன் இவருக்கு இருந்த ரகசிய தொழில் உறவுகளே இந்த பதவி விலகலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மந்திரி சுதன் குருங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்புகளை பிரதமர் பாலேந்திர ஷா தற்காலிகமாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் உருவான புதிய அரசாங்கத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது பிரதமர் பாலேந்திர ஷாவிற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 9 அன்று மற்றொரு மந்திரி நடத்தை விதிகளை மீறியதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உள்துறை மந்திரியும் விலகியுள்ளது நேபாள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
