நெகிழ்ச்சி... மதநல்லிணக்க கந்தூரி விழா - அனைத்து குடும்பத்தினருக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு!

 
பிரியாணி நெய்சோறு கந்தூரி

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கரிசல்பட்டியில் உள்ள முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபி விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக, முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசலில் ஜமாத் கமிட்டி சார்பில் சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும் நோய் நொடியின்றி நலமுடனும் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் இந்தப் பிரார்த்தனை நடத்தப்பட்டு விழா தொடங்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு மொத்தம் 75 ஆடுகள் வெட்டப்பட்டுச் சுவையான கறிக்குழம்பு தயாரிக்கப்பட்டது. சுமார் 1000 கிலோ ஆட்டிறைச்சி, 800 கிலோ அரிசி, 100 கிலோ நெய் மற்றும் 3,000 முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் சுமார் 4,000 பேருக்கு உண்ணும் வகையில் மணக்கும் நெய்ச்சோறு தயாரானது.

சமூக நல்லிணக்கத்தை வலிமையாக்கும் வகையில், பல வண்ணங்களிலான சுமார் 700 வாளிகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு வாளியிலும் தோராயமாக 5 கிலோ நெய்ச்சோறும், 4 முட்டைகளும் வைக்கப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டன. மேலும், இதற்குத் தனியாக மட்டன் கறிக்குழம்பும் வழங்கப்பட்டது.

கரிசல்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து இவற்றை வாங்கிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்ற மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது. மதநல்லிணக்கத்தைக் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழாவால் கரிசல்பட்டி கிராமம் முழுவதும் நெய்ச்சோற்றின் நறுமணம் கமகமத்தது.