மதுரையில் நெகிழ்ச்சி... உழைப்பாளர் தினத்தில் ரூ1க்கு மசாலா தேநீர்!
இன்று மே 1ம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், உழைப்புக்கு மரியாதை செய்து நெகிழச் செய்துள்ளார் மதுரையைச் சேர்ந்த நந்தினி.
பூமி தோன்றிய காலம் முதல் உழைப்பாளர்களால் தான் பூமி பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. உழைக்கும் மக்களின் எவர்க்ரீன் ஆகாரம் தேநீர் தான். எத்தனை களைப்பாக இருந்தாலும் ஒரே ஒரு கப் தேநீர் மூலம் சகலத்தையும் விரட்டி அடித்துவிட முடியும். அதே போல் வெறும் தேநீரை மட்டுமே ஆகாரமாக கொண்டு இன்னமும் வாழ்ந்து வரும் உழைப்பாளர்கள் கோடிக்கணக்கானோர். உழைப்பாளர் தினத்திற்கு மரியாதை தரும் வகையில் இன்று மே 1 ம் தேதி முழுவதும் தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வெறும் ரூ1க்கு மசாலா டீ வழங்கி அசத்தியுள்ளது மதுரையில் உள்ள நைனாஸ் டீ பார் எனும் தேநீர் கடை.

இது குறித்து நைனாஸ் டீ பார் தேநீர் கடையின் நிறுவனர் நந்தினி ” எங்களது தேநீர் நிலையம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்க்காக எங்களின் தனிச்சிறப்பு நாங்கள் வழங்கும் மசாலா டீ தான். இங்கு வந்து தினமும் அதனை விரும்பி குடிப்பவர்கள் நூற்றுக்கணக்கானோர். சாதா டீ தொடங்கி இஞ்சி, ஏலக்காய், மசாலா, திரிகடுகம் என 13 வகையான மூலிகைகள் சேர்த்து தயாரித்து வழங்கி வருகிறோம்.
இந்த தேனீரின் விலை வெறும் ரூ10 தான். இவை அனைத்தையும் நாங்களே தயார் செய்து இந்த மூலிகை தேநீரை விற்பனை செய்து வருவதால் தான் எங்களால் இந்த விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் உழைப்பாளர்களுக்கு மரியாதை தரும் வகையில் ஒரு ரூபாய்க்கு மசாலா டீயை வழங்கி வருகிறோம். இதற்கு முன்பாக காளவாசல் புறவழிச் சாலையில் அமைந்துள்ள எங்களது கடையில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வந்தோம். தற்போது பெரியார் பேருந்து நிலையத்திலும் இந்த சேவையை செய்து வருகிறோம்.கடந்த 3 நாட்களாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு டோக்கன் கொடுப்போம். அதனை இன்றுகொடுத்து ரூ1க்கு தேநீரை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
