நெகிழ்ச்சி... திருப்பதியில் பக்தர் தவறவிட்ட 40 கிராம் தங்கக் காப்பை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த விஜிலென்ஸ் ஊழியர்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவர் தவறிழைந்துவிட்ட 40 கிராம் தங்கக் காப்பு, தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டுப் பத்திரமாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் பக்தரான பாத ராஜ ஸ்ருதி என்பவர், தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசித்துள்ளார். பின்னர், பிரசாத விநியோக மையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரது கையிலிருந்த 40 கிராம் எடையுள்ள தங்கக் காப்பு நழுவிக் கீழே விழுந்துள்ளது. இதனை அவர் கவனிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அந்தப் பாதையில் பின்னால் வந்த சிலர், காப்பை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகக் கவனித்த விஜிலென்ஸ் அதிகாரிகள், உடனடியாக வயர்லெஸ் கருவி மூலம் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் விஜிலென்ஸ் ஊழியருக்கு இதுக் குறித்து தகவல் தெரிவித்தனர்.
உஷாரான அந்த பெண் விஜிலென்ஸ் ஊழியர், காப்பை எடுத்து சென்றவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களிடமிருந்து அதனைப் பாதுகாப்பாக மீட்டு மேலதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதற்கிடையே தன்னுடைய தங்கத்தினாலான காப்பை தொலைத்ததை உணர்ந்து திருமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த ஸ்ருதியிடம் முறையான விசாரணைக்குப் பிறகு அந்தத் தங்கக் காப்புப் பத்திரமாக வழங்கப்பட்டது. விஜிலென்ஸ் ஊழியரின் இந்த நேர்மையான நடவடிக்கைக்குப் பக்தர்களும் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
