நெகிழ்ச்சி... படுக்கையிலேயே முடங்கிய நிலையிலும் 300-க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்த பெண் லட்சுமி நரசம்மா!

 
லட்சுமி நரசிம்மா

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் 55 வயது லட்சுமி நரசம்மா. இவருக்கு தனது 20 வயதிலேயே முடக்கு வாதம் என்ற கடுமையான நோய் தாக்கியது. காலப்போக்கில் நோய் தீவிரமடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக அவர் முற்றிலும் நடக்க முடியாமல் படுக்கையிலேயே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். உடல் ரீதியான வேதனை மற்றும் குடும்பத்தின் கடுமையான நிதி நெருக்கடியால் அவர் ஒரு கட்டத்தில் தீவிர மனச்சோர்வுக்கும் ஆளானார்.

 

இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு அண்டை வீட்டாரின் வழிகாட்டுதலின்படி, ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் ‘ஒன் லைப்’ (1Life) என்ற தற்கொலை தடுப்பு உதவி மையத்தில் தொலைபேசி ஆலோசகராக லட்சுமி இணைந்தார். தீவிர மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இந்த உதவி மையத்தை அழைப்பவர்களின் வலிகளை, தனது படுக்கையிலிருந்தவாறே தொலைபேசி மூலம் பொறுமையாகக் கேட்டு அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதுவரை 300-க்கும் மேற்பட்டோரின் தற்கொலை எண்ணங்களை மாற்றி, அவர்களை நல்வழிப்படுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து லட்சுமி நரசம்மா கூறுகையில், "உதவி மையத்திற்கு வருபவர்களின் கடுமையான துயரங்களையும், வாழ்வாதாரப் போராட்டங்களையும் கேட்கும்போது, எனது சொந்த பிரச்சனைகள் மிகவும் சிறியதாகத் தோன்றுகின்றன. மக்கள் தங்கள் பிரச்சனைகளைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மன உறுதியே அனைத்திற்கும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

படுக்கையிலிருந்தபடியே பிறரது வாழ்வில் நம்பிக்கையை விதைத்து வரும் அவரது இந்த உன்னத சேவைக்கு கணவர் மற்றும் குடும்பத்தினர் முழு ஆதரவாக இருந்து வருகின்றனர். உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று, இவரது இந்த நெகிழ்ச்சியான சேவை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.