"மக்களின் வாக்குரிமையை மதியுங்கள்!" - ஆளுநருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை!

 
பா.ரஞ்சித் பா.ரஞ்சித்

தமிழகத்தில் நிலவும் அரசியல் இழுபறிக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துக் காட்டமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவரது அறிக்கையில், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக), ஜனநாயக முறைப்படி மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்று, ஆட்சி அமைக்க ஆளுநர் எவ்விதக் காலதாமதமுமின்றி உடனடியாக அழைக்க வேண்டும்."

திருமா விஜய்

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும், மக்களின் வாக்குரிமையின் மதிப்பையும் காக்க வேண்டியது ஆளுநரின் கடமை என நீலம் பண்பாட்டு மையம் சார்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சமூக மாற்றத்திற்காகப் பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இந்த ஆதரவு தவெக-விற்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது. தலித் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலிக்கும் ரஞ்சித், விஜய்யின் அரசியல் நகர்வை ஆதரிப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

விஜய்

இன்று மாலை 4:30 மணிக்கு விஜய் ஆளுநரைச் சந்திக்க உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றிச் சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலகினரும் ஆளுநரின் காலதாமதத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருவது ஆளுநர் மாளிகைக்குப் பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.