இன்றுடன் ஓய்வு... வைகோவுக்கு மாநிலங்களவையில் பிரியாவிடை!

 
வைகோ


 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இவருடன், திமுகவின் சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவா் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 6 எம்பிக்கள் தங்களின் கடைசி உரையை மாநிலங்களவையில் இன்று நிகழ்த்தியுள்ளனர். முன்னதாக வைகோவை குறிப்பிட்டு பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்,

"நாடாளுமன்றத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும், தனது அனல்பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்த்த வைகோ இன்றுடன் ஓய்வுபெறுகிறார். 1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை இந்த அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மீண்டும் 2019 ல் மாநிலங்களவை உறுப்பினரானார். இந்த அவைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை  அளித்துள்ளார். 

கூட்டாட்சி, சமூக நீதி பிரச்னைகளுக்காக அவரது குரல் ஒலித்தது. கட்சி பாகுபாடின்றி நாட்டின் நலனுக்காக செயல்பட்டவர்" எனத் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து, ஓய்வுபெறும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் கடைசி உரையை மாநிலங்களவையில் நிகழ்த்தினர்.  இதில், திமுக உறுப்பினர் வில்சன், ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் மநீம கமல், திமுகவின் சல்மா, எஸ்.ஆா். சிவலிங்கம், அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.