TASMAC கடைகளில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு... 6 மதுபாட்டில்கள் தான் வாங்க முடியும்!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளின் ஒரு பகுதியாக டாஸ்மாக் மதுபான விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு தனிநபர் ஒரே நேரத்தில் அல்லது ஒரே ரசீதில் வாங்கக்கூடிய மதுபானத்தின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது: இந்திய தயாரிப்பு மதுபானம் அதிகபட்சமாக 4.5 லிட்டர் (இது 6 முழு பாட்டில்களுக்கு சமம்) தான் வாங்க முடியும். அதே போன்று பீர் அதிகபட்சமாக 7.8 லிட்டர் (சுமார் 12 பாட்டில்கள்), ஒயின் அதிகபட்சமாக 9 லிட்டர் தான் வாங்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த ஆண்டு இதே தேதியில் இருந்த மதுபான இருப்பில் 50 சதவீதத்திற்கு மேல் கூடுதலாக இருப்பு வைக்கக் கூடாது. அதற்கு மேல் இருந்தால் அது 'பதுக்கல்' எனக் கருதப்படும். ஒரு கடையின் தினசரி விற்பனை அளவு, கடந்த ஆண்டின் சராசரி விற்பனையை விட 30 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது. திடீர் விற்பனை உயர்வு ஏற்பட்டால் அது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்துவர். அரசியல் கட்சிகள் வழங்கும் டோக்கன்கள் அல்லது கூப்பன்களைக் காண்பித்து மதுபானம் வாங்குவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மதுக்கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது இரவு 10 மணிக்கு மேலோ செயல்படக் கூடாது. விதிகளை மீறும் பார்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் செலுத்தியுள்ள வைப்புத்தொகையும் பறிமுதல் செய்யப்படும்.

தற்போது டாஸ்மாக் கடைகள் அனைத்தும் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பாட்டிலின் விற்பனையும் தலைமையகத்திலிருந்து நேரலையாகக் கண்காணிக்கப்படுகிறது.
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தேர்தல் நடைபெறும் தினத்திற்கு முன்னதாக 48 மணிநேரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். இந்தத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகிப்பதைத் தடுக்கப் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
