மகளிர் உரிமைத்தொகை மறுசீரமைப்பு... இனி இவர்களுக்கு கிடைக்காது - நிதி அமைச்சர் தகவல்!

 
மகளிர் உரிமைத்தொகை மகளிர் உரிமைத்தொகை

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தங்களது தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது மற்றும் திட்டத்தில் நிலவி வரும் முறைகேடுகளைக் களைந்து மறுசீரமைப்பது குறித்த அதிரடி நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர் என். மரிய வில்சன், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சில பெண்களும் இந்த நிதியுதவியைப் பெற்று வருவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது இத்திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

 ரூபாய் சம்பளம்

தகுதியற்ற நபர்கள், போலியான ஆவணங்கள் மூலம் பலன் பெறுவோர் மற்றும் அரசின் தகுதி வரம்பிற்குள் வராத பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், தகுதியிருந்தும் விடுபட்ட உண்மையான ஏழைப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பைச் செயல்படுத்துவது குறித்துப் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய விதிமுறைகள் (60 வயதுக்குட்பட்ட தகுதியான பெண்களுக்கு வழங்குவது போன்றவை) குறித்த முழுமையான விபரங்கள், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மாநில அரசின் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை பணம் ரொக்கம் ரூபாய்

மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்த 'வெள்ளை அறிக்கை' வெளியிடப்படும் என்றும், அதன் பின்னரே திட்டங்களின் விரிவான செயல்பாடுகள் மக்கள் முன் வெளிப்படையாக வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாற்றங்கள் தகுதியான ஏழை எளிய பெண்களுக்கு முழுமையாகப் பலன் தரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.