“ஏளனம் பேசியோருக்குச் செயலால் பதிலடி... ‘குட்டி நண்பா நண்பீஸூக்கு’ ஸ்பெஷல் நன்றி - விஜய் அறிக்கை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) நிறைவடைந்த நிலையில், தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பதிவாகியுள்ள 85 சதவீத வாக்குப்பதிவு குறித்து தவெக தலைவர் விஜய் உற்சாகமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கானது மட்டுமே என்ற பிம்பத்தைத் தமிழக மக்கள் உடைத்துள்ளதாக விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "அரசியல் என்பது அனுபவசாலிகளுக்கும், பதவிகளை அனுபவிப்பவர்களுக்கும் மட்டுமே என்று கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள் உடைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் இப்போது நிகழத் தொடங்கிவிட்டது" என்று அவர் பெருமிதம் கொண்டுள்ளார்.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் 85 சதவீத வாக்குப்பதிவு என்பது இதுவரை காணாத ஒரு சிகரமான நிகழ்வு என்றும், ஜனநாயகத் திருவிழாவின் உண்மையான அர்த்தம் நேற்றைய தினம்தான் உணரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது தொண்டர்களையும் குடும்ப உறவுகளையும் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ள விஜய், குழந்தைகளைக் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.
"நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸுக்கு உங்களுடைய விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்" எனத் தனது பாணியில் அன்பைப் பகிர்ந்துள்ளார்.
தேர்தல் நாளில் வாக்களிப்பதற்காகப் பெரும்பொருள் செலவு செய்து வெளிநாடுகளில் இருந்து வந்த 'ஜனநாயகர்களை' இருகரம் கூப்பி வணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் களப்பணியைப் பாராட்டிய விஜய், "இவர்களுக்கு என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள்? என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் என் கட்சித் தோழர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்" என்று கூறியுள்ளார். வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளின் உழைப்பு தனக்கு மனநிறைவைத் தந்துள்ளதாக அவர் வாழ்த்தியுள்ளார்.
தமிழகத்தின் வாக்குப்பதிவு சதவீதம் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பது, தவெக போன்ற புதிய சக்திகளின் வரவால் ஏற்பட்ட தாக்கமாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய்யின் இந்த அறிக்கை, தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே தனது கட்சிக்குக் கிடைத்துள்ள தார்மீக வெற்றியாக அவர் கருதுவதைக் காட்டுகிறது.
