REWIND: காவிரி விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதா - வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டம்!
1993-ம் ஆண்டு காவிரி நதிநீர் உரிமையை மீட்கும் நோக்கில், அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா சென்னை மெரினா கடற்கரையில் மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய ப்ளாஷ்பேக் இன்றைய தலைமுறைக்கு தெரியாது.
1991-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கர்நாடகா தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால் தமிழகத்தின் விவசாயப் பகுதிகள் கடும் நீர் நெருக்கடியைச் சந்தித்தன.

கர்நாடக அரசை உத்தரவை அமல்படுத்த வைக்க வலியுறுத்தி, 1993 ஜூலை 18 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வித முன் அறிவிப்புமின்றி சென்னை மெரினா கடற்கரையில் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக முன்வைத்தார். முதலமைச்சரின் இந்த அறப்போராட்டம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், தேசிய அளவில் கவனத்தையும் ஈர்த்தது. 4 நாட்கள் தொடர்ச்சியாக நீடித்த இப்போராட்டத்தைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நேரில் வந்து உறுதியளித்ததை ஏற்று ஜெயலலிதா தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
