அரிசி விலை வரலாறு காணாத அளவில் உயர்வு - 25 கிலோ மூட்டைக்கு ₹300 வரை அதிகரிப்பு!

 
அரிசி

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், தற்போது நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் வெளிச்சந்தையில் அரிசியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. நடப்பு பருவத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும், வறண்ட வானிலை நீடிப்பதினாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நெல் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது.

தமிழகத்திற்குத் தேவையான சன்ன ரக அரிசி வரத்து வெளிமாநிலங்களில் இருந்து பெருமளவு குறைந்துள்ளதே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன் டீசல் விலை உயர்வால் லாரி வாடகைக் கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதும் அரிசி விலையேற்றத்திற்கு மற்றொரு முக்கியக் காரணியாகும்.

அரிசி ஆலை

வெளிச்சந்தையில் விநியோகம் குறைந்ததன் காரணமாக, சில்லறை மற்றும் மொத்த விற்பனை அங்காடிகளில் வெள்ளை பொன்னி, பிபிடி, பாபட்லா பொன்னி, கர்நாடகா பொன்னி மற்றும் நெய் கிச்சடி உள்ளிட்ட பெரும்பாலான அரிசி ரகங்களின் விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை திடீரென அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ₹1,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 25 கிலோ எடையுள்ள தரமான அரிசி மூட்டை, ஒரேடியாக ₹200 முதல் ₹300 வரை உயர்ந்துள்ளது. தற்போதைய வெளிச்சந்தையில் 25 கிலோ அரிசி மூட்டை ₹1,600 வரை எகிறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரிசி

வறட்சி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த அரிசி விலை உயர்வு தற்காலிகமானது அல்ல என்றும், இன்னும் அடுத்த 6 மாதங்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்பட்டாலும், வெளிச்சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் விலையேற்றம் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவினங்களை வெகுவாகப் பாதித்துள்ளதால், அரசு தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.