அரிசி விலை கிடுகிடு உயர்வு - 50 நாட்களில் 3-வது முறையாக கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரிப்பு!
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான அரிசியின் விலை கடந்த 50 நாட்களுக்குள் மூன்றாவது முறையாகக் கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ள இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன. சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொன்னி அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்து தற்போது ரூ.85-க்கு விற்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்ற நாட்டுப் பொன்னி அரிசியின் விலையும் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.90-ஐ எட்டியுள்ளது. தினசரி பயன்பாட்டில் உள்ள இட்லி அரிசி கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.50-க்கும், ஐஆர்20 அரிசி கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து அரிசி விலை உயர்ந்து வருவதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
