பாஜாகவில் இணையும் செல்வப்பெருந்தகை?! - ரகசியப் பேச்சுவார்த்தைப் பின்னணி விபரம் அம்பலம்!

 
செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாக வெளியாகி வரும் தகவல் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை, கடந்த சில நாட்களாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் முற்றிலும் மௌனம் காத்து வருகிறார். முன்னதாக அவர் திமுக-வில் இணையப் போவதாகப் பரவலான வதந்திகள் எழுந்தன. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் திரைக்குப் பின்னால் காட்சிகள் முற்றிலும் மாறியுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் குடும்பம்

டெல்லி பாஜக மேலிடப் பிரமுகர்கள் மற்றும் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர், செல்வப்பெருந்தகையைத் தங்களது கட்சியில் இணைப்பதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

செல்வப்பெருந்தகை ஏன் திடீரென பாஜக-வை நோக்கித் திரும்புகிறார் என்பது குறித்து அரசியல் உளவுத்துறை வட்டாரங்கள் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளன. மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இன்னும் முழுமையாக முடிவடையாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் திமுக பக்கம் சென்றால் அது அவரது அரசியல் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பாக இருக்காது என்றும், மாறாக மத்தியில் ஆளும் பாஜக-வில் இணைந்தால் அவருக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பும், அரசியல் எதிர்காலமும் உறுதி செய்யப்படும் எனப் பாஜக மேலிடம் தரப்பில் பலத்த 'நம்பிக்கை வார்த்தை' அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக தரப்பிலிருந்து வந்த இந்தத் தூது மற்றும் வாக்குறுதிகள் குறித்துத் தனது ஆதரவாளர்களுடன் செல்வப்பெருந்தகை தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் திமுக - தவெக - அதிமுக இடையே எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் குதிரை பேர அரசியல் ஒருபுறம் உச்சகட்டத்தை எட்டியுள்ள வேளையில், காங்கிரஸின் முக்கிய முகமான செல்வப்பெருந்தகை பாஜக பக்கம் சாய உள்ளதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல், தமிழகக் கூட்டணி அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.