எகிறும் எதிர்பார்ப்பு... இன்று காலை கூடுகிறது முதல்வர் விஜய் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் - மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முறைப்படி பதவியேற்றது. அதனைத் தொடர்ந்து மே 21-ஆம் தேதி 23 அமைச்சர்களும், மே 22-ஆம் தேதி மேலும் இரு அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்கள் அனைவரும் தங்களது துறைகளில் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்க இன்று காலை 10 மணிக்கு முதல் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

தேர்தல் களம் கண்ட போது தவெக தலைவர் விஜய் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தார். அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, முதற்கட்டமாக 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறுவிவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி ஆகிய முக்கிய வாக்குறுதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளதால், அதுகுறித்த முக்கிய ஆலோசனைகள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தங்களது தேர்தல் வாக்குறுதிப்படி மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக, "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினைத் தவெக அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்து, தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கு அரசுக்குச் சில நிர்வாக ரீதியான கால அவகாசம் தேவைப்படுகிறது" என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டிருந்தார். அந்த அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த இறுதிக்கட்ட முடிவுகள் இன்று எடுக்கப்பட்டு, கூட்டத்தின் முடிவில் இல்லத்தரசிகள் கொண்டாடும் வகையிலான அதிரடி அறிவிப்பு வெளியாகலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், இன்று வெளியாகப் போகும் அறிவிப்புகளை நோக்கி ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வையும் திரும்பியுள்ளது.
