எகிறும் எதிர்பார்ப்பு... இன்று அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுகவின் 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா ஏற்பு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்குகிறது.
கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 பேருக்கு எதிராக அதிமுக தரப்பில் தகுதிநீக்க நடவடிக்கை கோரி முறையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 6 எம்எல்ஏக்களும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து அதிமுக கொறடா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தகுதிநீக்க நடவடிக்கைக்கான புகார்கள் மற்றும் கோரிக்கைகள் சபாநாயகரிடம் நிலுவையில் இருக்கும்போது, எம்எல்ஏக்களின் ராஜினாமாவை அவசர அவசரமாக ஏற்பது சட்டவிதிகளுக்கு எதிரானது என்றும், இதன் பின்னணியில் முறைகேடுகள் உள்ளதாகவும் மனுவில் வாதிடப்பட்டது. அந்த எம்எல்ஏக்கள் தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில்தான் ராஜினாமா செய்துள்ளனர் என்பதைக் கேட்டறிந்து, சட்டப்பூர்வமான நடைமுறைகளின் படியே சபாநாயகர் முடிவு எடுத்துள்ளதாகத் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து முடித்த நிலையில், இன்று இதற்கான தீர்ப்பு வெளியாகிறது. இந்தத் தீர்ப்பானது தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவிலும், மாநில அரசியல் களத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
