எகிறும் எதிர்பார்ப்பு.. தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு - நாளை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர்!

 
நாடாளுமன்றம் மசோதா நாடாளுமன்றம் மசோதா

மத்திய அரசு அறிவித்துள்ள நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் நாளை ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய மிக முக்கியமான இரண்டு மசோதாக்கள் இக்கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளன.

2023ல் கொண்டுவரப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) நடைமுறைக்கு வருவதில் இருந்த சிக்கல்களை நீக்க இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. முந்தைய சட்டப்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என இருந்தது. ஆனால், புதிய திருத்தத்தின் மூலம் 2029 பொதுத் தேர்தலிலேயே 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

மோடி

பெண்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 850 வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 273 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல் மாநிலச் சட்டசபைகளிலும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மக்கள் தொகை அதிகரிப்பைக் கணக்கில் கொண்டு இந்த வரைபடம் மாற்றி அமைக்கப்படும்.

நாளை (ஏப். 16) பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றுகிறார். மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு விவாதம் தொடங்கும். ஏப்ரல் 17ம் தேதி மக்களவையில் மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெறும். உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதங்களுக்குப் பதிலளிப்பார். ஏப். 18: மாநிலங்களவையில் மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

இந்தச் சிறப்பு கூட்டத்தொடருக்காக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தங்களது எம்.பி-க்களுக்கு 'திரி-லைன் விப்' எனப்படும் கட்டாய உத்தரவைப் பிறப்பித்துள்ளன. தமிழகத்தில் திமுக போன்ற கட்சிகள், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தச் சிறப்பு கூட்டத்தொடர் மூலம் இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் கட்டமைப்பு ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.