எகிறும் எதிர்பார்ப்பு... 9 போலீசாருக்கு என்ன தண்டனை?! - சாத்தான்குளம் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தண்டனை விவரங்களை இன்று மாலை 3:30 மணிக்கு மதுரை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரைச் சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கடந்த மார்ச் 23-ம் தேதி நீதிபதி முத்துக்குமரன் அதிரடித் தீர்ப்பளித்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட மொத்தம் 9 போலீசார் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. (சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணையின் போதே உயிரிழந்தார்). இது 'அரியவகைக்கும் அரிய வகை' வழக்கு என்பதால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனையான மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
முதலில் இன்று காலை 9 மணிக்கே தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதி சில காரணங்களால் இந்த அறிவிப்பை மதியம் 3:30 மணிக்கு ஒத்திவைத்துள்ளார். இதையொட்டி மதுரை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொடூரமான முறையில் ஒரு தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து கொன்ற போலீசாருக்கு ஆயுள் தண்டனை கிடைக்குமா அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படுமா? என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளது.
