எகிறும் எதிர்பார்ப்பு... 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் விளையாடும் ஜிம்பாப்வே!

 
ஜிம்பாப்வே கிரிக்கெட்

கடைசியாக 2002-ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இருதரப்புத் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தின் போது ஜிம்பாப்வே அணி இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 (T20I) போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

நியூசிலாந்து ஜிம்பாப்வே

கடந்த 2002-ல் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியுடன் ஜிம்பாப்வே விளையாடியது. அதன் பிறகு இந்திய அணி பலமுறை ஜிம்பாப்வே சென்றிருந்தாலும், அவர்கள் இந்தியாவிற்கு வந்து விளையாடுவது இதுவே கால் நூற்றாண்டுக்குப் பிறகு முதல் முறையாகும். ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வேளையில், இந்தியாவைப் போன்ற ஒரு வலுவான அணியுடன் விளையாடுவது அந்த நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். அதேபோல், இந்திய அணியின் இளம் வீரர்களுக்குத் தங்களது திறமையை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

இந்தியா ஜிம்பாப்வே

கடந்த 2024 ஜூலை மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியப் படை 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய மைதானங்களில் ஜிம்பாப்வே வீரர்களைப் பார்ப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் நிகழ்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.