பயங்கரம்... மகாராஷ்டிராவில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 கேஸ் சிலிண்டர்கள்!

 
சிலிண்டர்

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடுமையான தொடர் கனமழையின் காரணமாகப் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் உச்சகட்டமாக ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள எச்பிசிஎல் (HPCL) எரிவாயு சிலிண்டர் நிரப்பு மையத்திற்குள் திடீரென வெள்ளநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த சுமார் 3,000 எல்.பி.ஜி. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள பாதாளகங்கா ஆற்றில்  மிதந்து செல்லும் அதிர்ச்சி காட்சிகள்  வெளியாகியுள்ளன.

வெள்ளத்தில் மிதந்து செல்லும் இந்தச் சிலிண்டர்களில் சில எரிவாயு நிரப்பப்பட்டவையாகவும், சில காலியாகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆற்றில் சிலிண்டர்கள் மிதந்து வருவதைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் பலர், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவற்றை ஆற்றில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு சேகரித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தையும், பரவலான அச்சுறுத்தலையும்  ஏற்படுத்தியுள்ளது.

Maharashtra floods sweep away 3,000 LPG cylinders; people loot them after DM says 'don't touch or collect' - The Economic Times

இதனையடுத்து ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜவாலே பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கையில், ஆற்றில் மிதக்கும் சிலிண்டர்களை யாரும் தொடவோ அல்லது சேகரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இந்தச் சிலிண்டர்கள் கடுமையான சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் ஆபத்தான நிலையில் இருக்கலாம் என எச்சரித்துள்ளார். மேலும் பொதுமக்கள் யாராவது இந்தச் சிலிண்டர்களைக் கண்டெடுத்தால் உடனடியாக அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலோ அல்லது காவல்துறை அதிகாரிகளிடமோ ஒப்படைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.