ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! விமானி உட்பட 3 பேர் பலி

 
சவுதி

 

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அங்கு நின்றிருந்த விமானம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், விமான கேப்டன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் காயமடைந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், கடந்த வியாழக்கிழமை ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அவர்களில் சவுதியா விமான நிறுவனத்தின் கேப்டன் ஹமூத் அலி அல்-கல்தாமியும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டினரும் காயமடைந்துள்ளனர்; காயங்களின் தீவிரம் மாறுபடுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சவுதியா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றும் தாக்குதலில் சேதமடைந்தது. அந்த விமானத்தில் அப்போது பயணிகள் யாரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாக்குதலையடுத்து ரியாத் விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சில விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தின. பின்னர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக சவுதியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்தத் தாக்குதலுக்கு ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனாவில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.சவுதி அரேபியா மற்றும் ஏமனில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், விமானப் போக்குவரத்து மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.