நடுரோட்டில் காரை வழிமறித்து கல்லால் அடித்து 3 பேர் மீது கொலை வெறி தாக்குதல்... பரபரப்பு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர், ரமேஷ் மற்றும் விக்னேஷ். இவர்கள் கடந்த 28ம் தேதி வான்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கீழ்மாம்பட்டைச் சேர்ந்த சூர்யா, கவுதம் மற்றும் மோகன் ஆகிய 3 இளைஞர்கள் இவர்கள் எந்த ஊர் எனக் கேட்டு வீணாக வம்பு இழுத்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே அலெக்சாண்டர் உள்ளிட்ட மூன்று பேரும் தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த சூர்யா, கவுதம் மற்றும் மோகன் ஆகியோர் இவர்களது காரை நடுரோட்டில் திடீரென வழிமறித்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த மூன்று பேரையும் வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கி ஆபாசமாகத் திட்டியதுடன், தங்களின் கைகளாலும் அருகில் கிடந்த உடைந்த சிமெண்ட் கல்லை எடுத்தும் கொடூரமாகத் தாக்கினர். மேலும் அதே கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்து விடுவோம் என்றும் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
நடுரோட்டில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறைச் சம்பவம் குறித்து அலெக்சாண்டர் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் திவாஸ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளான சூர்யா, கவுதம் மற்றும் மோகன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
